திருப்பத்தூரை அடுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே 50 வருட காலமாக ஒன்பது ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பைக் கிடங்கில் பொதுமக்கள் குப்பை கழிவுகளை கொட்டிவருகின்றனர். இந்தக் குப்பை கிடங்கை சுற்றிலும் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்துவருகின்றனர்.
குப்பைக் கிடங்கில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவைகளை இந்தப் பகுதியில் கொட்டி மலைபோல் குவித்துள்ளனர். இந்தக் குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் செயற்கை ரசாயன உரம், பிளாஸ்டிக் உள்ளிட்ட வைகளை தரம் பிரித்து வேலைப்பாடுகள் ஒரு மாத காலமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இன்று (மார்ச் 5) குப்பை கிடங்கில் திடீரென தீ பிடித்து எரிந்து கொண்டு பயங்கர புகை கிளம்பியது. இதனால் அருகில் உள்ள பிரதான சாலையாக விளங்கக்கூடிய திருப்பத்தூரிலிருந்து பெங்களூரு, தர்மபுரி செல்லும் சாலை புகையால் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதுமட்டுமின்றி அருகிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குள் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறல் ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தும், ஊழியர்கள் மெத்தன போக்காக செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், மாவட்ட நிர்வாகம் தீயை அணைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க...குரலற்றவர்களின் குரலாக ஒலித்த ஈடிவி பாரத்திற்கு தெற்காசிய டிஜிட்டல் மீடியா விருது!