திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே உள்ள வாரச்சந்தையில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தில் திடீரென இலவச வேட்டி, சேலை தருவதாகக் கூறி ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். தைப்பூசத்தை ஒட்டி அந்த பகுதி மக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்குவதற்கான டோக்கனை தொழிலதிபர் ஐயப்பன் என்பவர் கொடுத்து இருக்கிறார்.
அப்போது, கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நெரிசலில் சிக்கி 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கு மேற்பட்டவர்கள் மயங்கிக் கீழே விழுந்தனர். இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த ஐயப்பனின் நிறுவனத்தை சேர்ந்த 15 பேர் மட்டுமே கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் இருந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் அவர்களும் ஓடியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வாணியம்பாடி போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து இருந்த தொழிலதிபர் ஐயப்பனை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 4 பெண்களுக்கும் தலா 2 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் அமைச்சர் எ.வ.வேலு, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இறந்தவர்களின் இறுதிச் சடங்கிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் உயிரிழந்தோருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கினார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் மறைவு!