வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, கர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த 17 வயது சிறுமி, சோளிங்கர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஆகிய நான்கு சிறுமிகளுக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் அரசு காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமிகளுக்கு குழந்தை திருமணத்தை நடத்த முயன்ற பெற்றோரிடம் சமூக நலத்துறை, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த 15 வயது சிறுமி தனக்கு வலுக்கட்டாயமாக இரவில் திருமணம் நடத்தியதாக விடிந்தவுடன் நேரடியாக விருதம்பட்டு காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் தெரிவிக்கையில், "எனக்கு வீட்டில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். அதை நான் மறுத்தும், நேற்று இரவு (ஜூலை 9) என் பாட்டி வீட்டில் உறங்கிகொண்டிருந்தபோது என்னுடைய கைகளை கட்டிவிட்டு வலுக்கட்டாயமாக இரவு சுமார் 11.30 மணியளவில் கழுத்தில் தாலி கட்டிவிட்டனர். நான் விடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வந்துவிட்டேன்" என்றார்.
இதன் பிறகு சமூக நலைத்துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் ஒருங்கிணைந்த சேவை மையப் பணியாளர்கள் சிறுமியின் பாதுகாப்பு கருதி அவரை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படிங்க... சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!