திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டல நாயனகுண்டா அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கர், வெண்ணிலா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அதில் மூத்த மகன் சித்தார்த் என்பவருக்கு ஐந்து வயது ஆகிறது.
இந்நிலையில் விடுமுறை என்பதால் சித்தார்த் தனது நண்பர்களுடன் இன்று காலை விளையாடிக்கொண்டிருந்தபோது அருகே உள்ள ஆற்று ஓடையில் நீர் சேமிக்க தோண்டப்பட்டுள்ள 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சிறுவனை மீட்கப் போராடினர், ஆனால் மீட்க முடியவில்லை.
அதன்பின்னர் உடனடியாகத் திருப்பத்தூர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர்.
இந்தத் தண்ணீர் சேமிக்கும் குழி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டதாகவும் அலுவலர்களின் மெத்தனப்போக்கால்தான் இந்தச் சிறுவன் இறந்ததாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைவைத்தனர்.
இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பெண்களை ஏமாற்றிய காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு