வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் புதிய மாவட்டமாக உருவான பின்னர் ஆட்சியர் தலைமையில் வாணியம்பாடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் முறையாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இதில் வாணியம்பாடி அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தகுந்த இடைவெளி பின்பற்றி 147 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் தும்பேரி கிராமத்தில் இருந்து மாற்றுத்திறனாளி கணேசன் என்பவர் முதியோர் உதவித்தொகை வழங்கக் கோரி மனு அளித்தார். இம்மனுவிற்கு அரைமணி நேரத்தில் தீர்வு காணப்பட்டு உடனடியாக முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அம்மனுதாரர் கணேசனிடம் வழங்கினார்.
மஜ்லீஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் அகமது, பாலாற்றில் அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், நியாய விலைக்கடைகளில் பொருள்கள் குறைவான எடையில் வழங்குவதாகவும், அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியும் மனு அளித்தார்.
தொடர்ந்து, அபூபக்கர் என்ற சிறுவன் தங்கள் பகுதியில் நாய், பன்றி ஆகிய விலங்குகளின் தொல்லை அதிகம் உள்ளதாக மனு அளித்தார்.
அனைத்து மனுக்களின் மீதும் விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க:முதியோர் உதவித்தொகை வழங்க லஞ்சம் கேட்ட அரசு அலுவலர்: வைரலாகும் ஆடியோ