திருப்பத்தூர் மாவட்டம், கசிநாயக்கன்பட்டி கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (35). இவருக்கு திருமணமாகி பவிதா என்ற மனைவியும் கீர்த்தனா (10) மகளும், ஜெகதீஷ் (8) என்ற மகனும் உள்ளனர். இவர் சென்னையில் கூலித் தொழில் செய்து வரும் நிலையில், மாதம் ஒரு முறை வீட்டிற்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க பாலாஜி சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். நேற்று (ஏப். 6) காலை பாலாஜி வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கினை செலுத்திவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, மகன் ஜெகதீஷூக்கு நீச்சல் கற்றுத்தர 5 லிட்டர் பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக்கொண்டு பாலாஜி தனது விவசாயக் கிணற்றிற்கு சென்றுள்ளார்.
பிளாஸ்டிக் டப்பாவை மகன் ஜெகதீஷ் இடுப்பில் கட்டிக் கொண்டு நீச்சல் அடித்த நிலையில், திடீரென கயிறு அவிழ்ந்து ஜெகதீஷ் கிணற்றுக்குள் சென்றுள்ளான். இதனை சற்றும் எதிர்பாராத பாலாஜி தனது மகன் கிணற்றுக்குள் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காப்பாற்ற தானும் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
அப்போது, பாலாஜி கிணற்றில் உள்ள சேற்றில் சிக்கி கூக்குரலிட்டுள்ளார். அதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இருவரது உடல்களும் உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாக்குச் செலுத்த ஊர் திரும்பிய பாலாஜி, அவருடைய மகன் இருவரும் கிணற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!