திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் சேலத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்ததன் பின்னர் மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'திருப்பத்தூர் மாவட்டமாக உருவாக, அதிமுக அரசே காரணம். அதிமுகவை அழித்துவிடலாம் என நினைக்கக்கூடிய எதிர்க்கட்சியினர்களுக்கு, சம்மட்டி அடிக்கும் வகையில் கூடியிருக்கக்கூடிய திருப்பத்தூர் மாவட்டமே, இதற்கு ஒரு சான்றாகும்.
யார் துரோகி? எனத்தெரிந்தது: இன்றைக்கு நம்மோடு இருந்துகொண்டு சில துரோகிகள், வெற்றி வாய்ப்புகளைத்தடுப்பதற்குப் பல்வேறு சதி வலைகளை பின்னினர். அதனால், நமக்கு ஆட்சி ஏற்படாமல் போய்விட்டது. இதனால், யார் துரோகி? அந்தக் கறுப்பு ஆடு யார் என்று அடையாளம் காணப்பட்டது.
துரோகிகள் ஆட்சியிலுள்ளவர்களின் கைகோர்த்துக்கொண்டு கைப்பாவையாக இருந்து நமது இயக்கத்தை முடக்க எண்ணுகின்றனர். ஆனால், ஒருபோதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை, எந்த கொம்பனாலும் அசைத்துப்பார்க்க முடியாது.
போதைப்பொருட்களால் சீரழியும் தமிழ்நாடு: மேலும், தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருட்கள் அதிக அளவில் விற்கப்படுவதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இதனால், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. குறிப்பாக, பள்ளி பெண்பிள்ளைகள் பேருந்தில் மதுபாட்டிலை குடித்துக்கொண்டு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கஞ்சா விற்பனை அதிகளவில் பல்வேறு பள்ளிப்பகுதிகளில் கஞ்சா அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது. இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதை சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டி இருக்கின்றேன்.
ஆன்லைன் ரம்மி தடைக்கு கருத்துக்கேட்பா? அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போதைய ஆட்சியில் ஆன்லைனில் ரம்மி விளையாட்டு அதிகரித்துள்ளது. இதனைத்தடை செய்ய மற்ற மாநிலங்கள் செயல்பட்டு கொண்டிருக்கையில், இதனை தற்பொழுது கருத்துகேட்கும் வகையில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் செயல்படுகின்றார்.
இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் முதலமைச்சர் ஆன்லைன் ரம்மிக்கு கருத்துக்கேட்கும் வகையில் செயல்படுவது என்பது வேதனைக்குரிய ஒரு செயலாக இருக்கிறது' எனப்பேசினார். இக்கூட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஒருத்தன ஏமாத்தனும்னா.. அவனோட ஆசைய தூண்டனும்.. ஆன்லைன் சூதாட்டத்தின் பின்புலம் என்ன?!