திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடியில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறையினர், நகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையில் தூய்மை பணிகள், பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை அலுவலர்களுக்கு தெரியாமல் மாவட்ட ஆட்சியர் சிவனருள் இன்று ( ஜூலை 7) திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க், சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் அருகே நீண்ட நாட்களாக தேக்கம் அடைந்த குப்பைகளை அகற்ற நகராட்சி பணியாளர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு உத்தரவிட்டு தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் அவ்வழியாக கையில் குழந்தையுடன் சென்றுகொண்டிருந்த பெண் தூய்மை பணியாளர், முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற இளைஞர்கள், பொதுமக்களை அழைத்து முகக்கவசம் வழங்கி வெளியில் முக கவசம் அணியாமல் சுற்றித் திரிந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.
இதனையடுத்து அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் சென்று கொண்டிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியினரை அழைத்து, அவர்களுக்கு முகக் கவசம், கையுறை உள்ளிட்டவற்றை அணிவித்து நலம் விசாரித்தார்.
அப்போது கரோனா காலத்தில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக தெரிவித்த மாற்றுத்திறனாளி தம்பதியினருக்கு, தன் சொந்த பணத்தை வழங்கி ஆட்சியர் ஆறுதல் கூறினார்.
அதுமட்டுமல்லாது அவர்களை அரவணைத்து அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரண பொருள்களை வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். இச்சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை கண்ட வாணியம்பாடி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.