திருப்பத்தூர்: மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்த நபர் 70 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் மூளைச்சாவு அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் முருகானந்தன் (38). இவர் மரம் ஏறுவதைத் தொழிலாகச் செய்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி (26) என்ற மனைவியும், புவியரசு (3) மகனும், கோபிநாத் என்ற கைக்குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று (டிச.25) காலை பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் தென்னை மரத்தில் தேங்காய் வெட்டும் வேலைக்காக முருகானந்தன் சென்றார். இப்போது மரத்தின் மீது ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 70 அடி உயரத்திலிருந்து அவர் தவறி கீழே விழுந்துள்ளார்.
அதில், தலையில் பலத்த காயமடைந்த முருகானந்தனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு முருகானந்தனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச் சாவு அடைந்ததாகக் கூறியுள்ளனர். இந்த தகவலைக் கேட்ட அவரது உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.
இதையும் படிங்க: என் மனைவிக்கு மூச்சுத்திணறல் எனக் கூறிய கணவர் கைது.. ஈரோட்டில் நடந்தது என்ன?
இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மூளைச் சாவு அடைந்த முருகானந்தனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். பின்னர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கை குழந்தையுடன் தவித்து நிற்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர் பாண்டியன் உடல் உறுப்பு தானம் செய்த தொழிலாளியின் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தொழிலாளியின் உடல் அரசு மரியாதையுடன் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: வைகை கரை காற்றே நில்லு.. முன்னாள் மாணவர்கள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு!