திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது36). இவர் மின்சாரக் கம்பம் சீர்செய்யும் தினக்கூலியாகப் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் நேற்று காலை 11 மணிக்கு சு.பள்ளிப்பட்டு அருகே உள்ள வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக மின்சார கம்பத்தில் ஏறி மின் வயரை பழுதுப் பார்க்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார். இதில் தலையில் பலத்த அடிபட்டு, மயக்கம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவரது உறவினர்கள், வெங்கடேசனை பணிக்கு அழைத்துவந்த மின்சார ஊழியர் பழனியை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்கும் பொருட்டு சமரச பேச்சுவார்த்தையில் காவல் துறையினர் ஈடுபட்டனர். இறந்தவருக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரி தொடர்ந்து இரண்டு மணி நேரமாக நீடித்த போராட்டத்தை உயர் அலுவலர்கள் பேசி தற்காலிகமாக முடித்து வைத்தனர்.
இதனையடுத்து, உயிரிழந்த வெங்கடேசனின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தங்களது நினைவுகளை புதுப்பித்த புதுவண்ணாரப்பேட்டை பள்ளி முன்னாள் மாணவர்கள்!