திருப்பத்தூர்: கடந்த சில நாள்களாக பெய்து வந்த கன மழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆம்பூர் அடுத்துள்ள பனங்காட்டூர் பகுதியில் ஓடும் மலட்டாறில் இன்று (நவ.22) திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் மேய்ச்சலுக்கு சென்ற பசுக்கள் சிக்கிக்கொண்டன. இந்நிலையில் ஓர் கரையிலிருந்து மற்றொரு கரைக்கு பசுக்களை அழைத்து வர அப்பகுதி இளைஞர்கள் முற்ப்பட்டபோது எதிர்பாராவிதமாக ஒரு பசு காட்டாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதையடுத்து உடனடியாக அங்கிருந்து இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு மலட்டாறில் அடித்து செல்லப்பட்ட பசுவை மீட்டு பத்திரமாக கரை சேர்த்தனர்.
இதேபோல் ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு பகுதி அருகே உள்ள பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகள் எதிர்பாராதவிதமாக வெள்ளப்பெருக்கின் நடுவே சிக்கிக்கொண்டன.
இதையடுத்து கால்நடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் ரப்பர் போட் உதவியுடன் பாலாற்றின் நடுவே சிக்கிக் கொண்டிருந்த கால்நடைகளை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.
இதையும் படிங்க: டிசம்பர் முதல் வாரம் கன மழை பெய்ய வாய்ப்பு- ஸ்ரீகாந்த், கிரிஷ் தகவல்