தமிழ்நாட்டில் கரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டு, 9 ஆயிரத்து 266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1,060 பேர் திருப்புத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று அதிகரிக்காமல் இருக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆம்பூர் பஜார் மற்றும் பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறி கூட்டமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் நோய் பரப்பும் வகையில் செயல்பட்ட 2 ரெடிமேட் கடைகள், 2 தேனீர் கடைகள் மற்றும் 3000 சதுரடிக்கு மேல் பெரிய அளவில் குளிர்சாதன வசதியுடன் செயல்பட்ட 2 ஜவுளி கடைகளுக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும், விதியை மீறி நோய் பரப்பும் விதமாக செயல்பட்ட கடை உரிமையாளர்கள் மீது காவல் துறை அலுவலர்கள் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களில் 99% பேருக்கு கரோனா