திருப்பத்தூர்: சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்(52). மாற்றுத்திறனாளியான இவர், காக்கங்கரை பகுதியில் ஊராட்சி எழுத்தராக (கிளார்க்) பணிபுரிந்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த போது, அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பெருமாள் கூறுகையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி காக்கங்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தணிக்கை மேற்கொண்டு முடித்த பின்பு, மாலை 6 மணி அளவில் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றேன். அதன்பின் காக்கங்கரை ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மீண்டும் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தார்.
அதன்படி அலுவலகத்திற்கு சென்று, கதவை திறந்தேன். அங்கு நந்தினியின் கணவர் சீனிவாசன், 'பெஸ்மில் முத்திரையை என்னை கேட்காமல் ஏன் பயன்படுத்தினாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின் திடீரென கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அந்த நேரத்தில் அக்கம் பக்கத்தினர் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீட்டு வரி ரசீதுக்கு 3000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது!