1976ஆம் ஆண்டு இறுதியில் மேற்கு வங்கத்திலிருந்து காவல் துறையினருக்கு பயந்து தமிழ்நாட்டின் ஒகேனக்கல் பகுதியில் நக்சலைட்டுகள் தஞ்சமைடந்தனர். அதன் பின்னர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. இதைத் தொடர்ந்து கொலை, கொள்ளை, தாக்குதல் என பல சம்பவங்களில் நக்சலைட்டுகள் ஈடுபட தொடங்கினர்.
இவர்களில் முக்கியப் புள்ளியாக இருந்தவர் சிவலிங்கம். இவரைப் பிடிக்க அப்போதைய ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஜோலார்பேட்டை அருகேயுள்ள ஏலகிரியில் காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் தலைமைக் காவலர் ஆதிகேசவேலு, காவலர்கள் யேசுதாஸ், முருகன் ஆகியோர் சிவலிங்கத்தை கைதுசெய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
அப்போது, திருப்பத்தூர் அருகே சேலம் பிரதான சாலையில் சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க வைத்தார். இதில் வாகனத்திலிருந்த காவல் ஆய்வாளர் பழனிசாமி உள்பட நான்கு காவலர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரக்ஷா பந்தனில் தங்கையை பார்க்க வந்த நக்சல் அண்ணன்...! சகோதரியின் சொல்லுக்காக காவல்துறையில் சரண்!
இந்நிலையில், திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் வீரமரணம் அடைந்த நான்கு பேரின் நினைவாக மணிமண்டபம் எழுப்பப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டுவருகிறது. இன்று 40ஆவது ஆண்டு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, வடக்கு மண்டல டிஐஜி காமினி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: நக்சலுடன் தொடர்பு: இரண்டு காவலர்கள் பணிநீக்கம்!