தமிழ்நாட்டில், வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அனைத்து கட்சி பிரமுகர்களும் அழைக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கமும், அரசியல் பிரமுகர்களுக்கு தேர்தல் குறித்த ஐயங்களுக்கான விளக்கமும் அளிக்கும் ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டனர். இதில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்தும் அலுவலர்கள் தங்களிடம் நடந்துகொண்ட நடத்தை முறைகள் குறித்தும் பல புகார்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் அரசியல்வாதிகளுக்கு எங்கு அனுமதி வாங்க வேண்டும், எத்தனை வாகனம் பயன்படுத்த வேண்டும், எவ்வளவு செலவு செய்ய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிமுறைகள் குறித்தும் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க எப்படி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தபால் ஓட்டுகள் குறித்த ஐயங்களையும் அரசியல் கட்சியினர் கேட்டறிந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சிவனருள் பேசுகையில், "கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்த எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். இந்த முறை நீங்கள் கூறிய எந்த தவறும் நடக்காது. கட்சிப் பிரமுகர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வு கடைசி நிலையில் இருக்கும் கட்சி தொண்டனுக்கும் இருக்கும் வகையில் நீங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
பொறுப்புணர்வும் விழிப்புணர்வும் ஒருசேர நம்மிடம் இருந்தால், இந்தத் தேர்தல் நமக்கான தேர்தலாகவும், எளிமையாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்க ஏதுவாக இருக்கும்" என்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சார் ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் வில்சன் ராஜசேகர், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் டி கே ராஜா, மாநில துணை தலைவர் பொன்னுசாமி அனைத்து கட்சி பிரமுகர்கள், தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆணையரை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி பாதிக்கப்பட்ட பெண் வியாபாரி கோரிக்கை!