திருப்பத்தூர்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழாவை, திருச்சில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹ, திமுக எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
விழாவில் முதலமைச்சரின் உரையை காணொளி வாயிலாக பொதுமக்களுக்கு காட்சிபடுத்துவதற்காக, விழா அரங்கத்தில் பெரிய திரைகள் பொருத்தப்பட்டிருந்தன. இதனை திருப்பத்தூர் அடுத்த பொம்மிங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவர் மூலம் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் முதலமைச்சரின் உரை முடிந்ததும் சுய உதவிக் குழு பெண்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
அப்போது அந்த பெரிய திரைகளின் இணைப்புகளை சந்திரகுமார் அழைத்து வந்திருந்த 11 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் துண்டித்துக் கொண்டிருந்தனர். இது குறித்த செய்தி சில இணையதளங்களில் வெளியானதோடு, முதலமைச்சர் நிகழ்ச்சியில் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது.
இதனையடுத்து உண்மையை அறிவதற்காக மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவை ஈடிவி பாரத் தொடர்பு கொண்டது. இது தொடர்பாக திட்ட அலுவலரிடம் விளக்கம் கேட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஈடிவி பாரத் குழுவை தொடர்பு கொண்ட திட்ட அதிகாரி, பணியில் ஈடுபட்டிருந்தது சந்திரகுமாரின் சொந்த குழந்தைகள் தான் எனவும். இது குறித்து தெளிவான விளக்கத்தை அவரிடம் எழுதி வாங்கியிருப்பதாகவும் கூறினார். விழா நடைபெற்றது தனியாருக்கு சொந்தமான அரங்கு என்றும் அந்த அரங்கிற்கான ஏற்பாடுகளை, மண்டப நிர்வாகிகள் தான் செய்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
சொந்த குழந்தைகள் தான் என்றாலும் மின்சாரம் தொடர்புடைய அபாயம் மிக்க பணியில் ஈடுபடுத்தலாமா? என்பது குறித்த கேள்விகளோடு வழக்கறிஞர் கே.எம்.விஜயனை ஈடிவி பாரத் குழு அணுகியது. இது குறித்து விளக்கம் அளித்த அவர், குழந்தை தொழிலாளர் சட்டப்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சம்பளம் பெறக் கூடிய பணியில் அமர்த்துவதுதான் குற்றம் எனவும். பள்ளியில் படிக்கும் மாணவன் தந்தையின் தொழிலில் விடுமுறை நாளில் உதவுவதை குழந்தை தொழிலாளராக கருத முடியாது என கூறினார்.
இதையும் படிங்க: Fact Check: மரக்காணத்தில் கடல் நீரை உறிஞ்சியதா மேகம்? உண்மையில் நடந்தது என்ன?