திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புலவர்பள்ளி பகுதியில் ஆலங்காயம் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் ஈஸ்வரன், அழகேசன் உள்ளிட்ட காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சிமெண்ட் லோடு ஏற்றிவந்த இரண்டு லாரிகளைக் காவலர்கள் நிறுத்தி சோதனை செய்தபோது, ஆவணங்களில் உள்ள வாகன எண்ணும், லாரியில் உள்ள எண்ணும் வெவ்வேறு எண்களாக இருந்ததால் சந்தேகமடைந்த காவலர்கள் விசாரணை செய்தபோது ஓட்டுநர்கள் முன்னுக்குப் பின்னாக பதில் அளித்துள்ளனர்.
இரண்டு லாரிகளையும் பறிமுதல்செய்த காவலர்கள் இரண்டு ஓட்டுநர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டபோது, லாரி ஓட்டுநர்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரனேஷ், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வைரப்பெருமாள் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் விஜயவாடாவிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, திண்டுக்கல் செல்லக்கூடிய லாரிகள் அரசுக்குச் செலுத்த வேண்டிய சாலை வரி, காப்பீட்டுத் தொகை, வாகன தகுதிச்சான்று உள்ளிட்டவைகளைச் செலுத்தாமல், அரசை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட போலி பதிவெண்களைக் கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஏமாற்றிவருவது தெரியவந்தது.
மேலும், 10 வாகனங்களை வைத்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்துவந்துள்ளதாகவும், வருடத்திற்கு ஒருமுறை அரசுக்கு செலுத்தவேண்டிய தொகையை செலுத்தாமல் ஏமாற்றி வந்ததும் கண்டறியப்பட்டது.
அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் வேல்முருகன் என்பவரை ஆலங்காயம் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
மேலும் போலி பதிவெண் கொண்டு பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபடுத்திவருகின்றனரா? என ஆலங்காயம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பைக் திருடி ஓஎல்எக்ஸில் விற்று வந்த நபர் கைது!