திருப்பத்தூர்: கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதியில் தெரு நாய்கள் அதிகரித்துள்ள நிலையில், நேற்றைய தினம் (டிச.23) ஆம்பூர் வாத்திமனை கோப்பு மசூதி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவனை, சாலையில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று வெறியுடன் கடித்ததில், மாணவன் காயமுற்றார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மாணவனை மீட்டு, முதலுதவி செய்து, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இந்த நிலையில், மாணவனை தெரு நாய்கடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு எத்தனை பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர்கள் கேட்டறிந்த நிலையில், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 01.01.2023 முதல் 18.12.2023 வரை 274 ஆண்கள், 109 பெண்கள், 15 ஆண் குழந்தைகள், 8 பெண் குழந்தைகள் என 406 பேர் தெரு நாய்கள் கடித்து சிகிச்சை பெற்றுள்ளதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
மேலும், ஆம்பூர் நகராட்சிக்குப்பட்ட பகுதியில் கூட்டம் கூட்டமாக திரியும் நாய்கள், அவ்வழியே செல்லும் நபர்களை துரத்திச் சென்று கடிப்பதாகவும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் சிலர் கீழே விழுந்து காயமடைவதாகவும், பள்ளி செல்லும் மாணவ மாணவியர்களையும் விடாமல் துரத்துவதாகவும், ஆகவே தெருவில் நடமாடுவதற்கே மிகவும் அச்சமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இந்த பிரச்சினைக்கு ஆம்பூர் நகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் தெரு நாய் கடியால் 3 லட்சத்து, 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 4 லட்சத்து 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 155 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: ஆம்பூர் அருகே தேநீர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து.. ரூபாய் 2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..