திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கெஜல்நாயக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடாசலம் (65). இவர் இன்று பச்சூர் பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மனைவி குணசுந்தரிவுடன் (60) இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இருவரும், லட்சுமிபுரம் பகுதியிலுள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக சென்ற கார், எதிர்பாராத விதமாக வெங்கடாசலத்தின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வெங்கடாசலம், அவரது மனைவி குணசுந்தரி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருபத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.