திருப்பத்தூர்: வாணியம்பாடி ஆசிரியர் நகர்ப் பகுதியில் வசித்து வருபவர், வசீம் அக்ரம். இவர் தனியார் நிதி உதவிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இரண்டு தினங்களுக்கு முன், இவர் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு, பின்னர் இரவு தன்னுடைய மாமியார் வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூன் 22) மாலை 4 மணிக்கு குடும்பத்துடன் வீட்டுக்கு வந்துள்ளார்.
கொள்ளைச் சம்பவம்
அப்போது வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் அறைகளில் இருந்த பீரோக்கள் திறந்த நிலையிலும் பொருள்கள் சிதறிக்கிடந்தும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து, உள்ளே வந்து பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது.
காவல் துறையினர் விசாரணை
சம்பவம் குறித்து வசீம் அக்ரம் கொடுத்தப் புகாரின்பேரில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை சேகரித்து அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து தேடிவருகின்றனர்.