வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர் கடந்த ஆண்டு புதிய மாவட்டமாக உருவானது. புதிய மாவட்டமாக உருவான பிறகு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் நியமிக்கப்பட்டார். காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் நியமிக்கப்பட்ட பிறகு சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, குற்றச் செயல், வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அது மட்டுமின்றி பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது யோசிக்காமல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து, வாகனச் சோதனையின் போது பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வது போன்ற ஒழுங்கீனமான செயல்களை யாரும் செய்யக்கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.
இந்நிலையில், காவல் துறையில் பணியாற்றி வரும் அனைத்துக் காவலர்களின் பணியினை ஊக்குவிக்கும் வகையில் 'வாரத்தின் சிறந்த காவலர்' என்ற பாராட்டுப் பத்திரமும், ரூ.500 ஊக்கத்தொகையும் காவல் துறையினருக்கு வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய உறுதுணையாக செயல்படும் காவலர், காவல் நிலையத்தில் பதிவேடுகளைச் சிறப்பாக பராமரித்தல், பொதுமக்களிடம் நற்பெயரைப் பெறும் வகையில் பணி செய்தல், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தல், வாகனச் சோதனையின்போது சட்ட விரோதச் செயல்களைக் கண்டுபிடித்தல் போன்ற செயல்களில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றும் காவலர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு, 'வாரத்தின் சிறந்த காவலர்' என்ற பாராட்டுப் பத்திரமும் ரூ.500 ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், காவல் துறை அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் 94862-42428 என்ற தொலைபேசி எண்ணில் குறுஞ்செய்தியாக அனுப்பலாம் எனவும், பொதுமக்களிடம் அவப்பெயரை சம்பாதிக்கும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனா: மதுரையில் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!