திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (40). இவர், இன்று (ஆகஸ்ட் 3) மதியம் மாச்சம்பட்டு காப்புக்காட்டுப்பகுதியில் தனக்குச் சொந்தமான கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கால்நடைகளுக்குத் தண்ணீர் காட்ட காட்டுப் பகுதியில் உள்ள ரெட்டிகிணறு என்னும் பகுதிக்கு கால்நடைகளுடன் நாராயணன் சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் உள்ள பாறையின் இடுக்கில் குட்டிகளை ஈன்ற கரடி ஒன்று நாராயணனை கொடூரமாகத் தாக்கியுள்ளது. நாராயணன் அலறல் சத்தம் கேட்ட பிற மேய்ச்சல்காரர்கள் உடனடியாக இச்சம்பவம் குறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலர் மூர்த்திக்குத் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அலுவலர்கள் நாராயணனை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காட்டுக்குள் விட சென்ற கரடி தாக்கி வனத்துறையினர் இருவர் காயம்!