திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த சூரியகாந்தி என்பவரின் மனைவி வசந்தா (55) இவர் திடீரென திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தலையின் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அப்போது பணியிலிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 4ஆம் தேதி தனது சொத்துக்களை அபகரிக்க முயலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அந்த மனுவில்:-
தான் துப்புரவு பணி செய்து வாழ்க்கை நடத்தி வருகிறேன். தனது தங்கை அமுதா கணவரை பிரிந்து 30 ஆண்டு காலமாக தன்னுடன் வாழ்ந்து வந்தார். கடந்த இரண்டு மாதம் முன்பு அவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில் அவருக்கு சொந்தமான வீட்டை தனது பெயரில் உயில் எழுதிக் கொடுத்துவிட்டார். அமுதா இறந்த பிறகு தானும் தனது கணவரும் அந்த வீட்டில் வசித்து வருகிறோம்.
இந்நிலையில் வீட்டிலிருந்த பட்டாவை அதே பகுதியை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் அவருடைய மகன் வினோத்குமார் இருவரும் திருடி சென்றனர். அதற்கு துணையாக அக்ராகரம் கிராம நிர்வாக அலுவலர் அந்தச் சொத்திற்கு போலியான பட்டாவை தயாரித்து அமுதாவின் மகள் ஈஸ்வரிக்கு கொடுத்துள்ளார்.
பின்னர் ஈஸ்வரி கஜேந்திரன் என்பவருக்கு சொத்தை விற்று விட்டதாக கூறி கஜேந்திரன் அவரது குடும்பத்தார் வீட்டை காலி செய்ய வேண்டுமென வீடு புகுந்து உருட்டுக்கட்டையுடன் தங்களை மிரட்டியும் தகாத வார்த்தையால் ஆபாசமாக பேசி சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் தான் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன்
இந்த சொத்து சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் , இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினரிடம் புகார் அளித்தபோது காவல் அதிகாரி மணி என்பவர் எங்களை வீட்டை காலி செய்யும்படி எதிர் தரப்பினருக்கு சாதகமாகப் பேசி மிரட்டி அனுப்பியது எங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
என்னை அடித்து உதைத்த சொத்தை அபகரிக்க நினைக்க முயலும் கஜேந்திரன் மற்றும்அவரது குடும்பத்தார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி போலி பட்டா செய்து கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வசந்தா தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:திருப்பத்தூரில் கன மழை...விவசாயிகள் மகிழ்ச்சி!