திருப்பத்தூர்: வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் நேற்று இரவு தேச மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரு கட்சியினரிடையே பேனர் வைப்பது மற்றும் நடனம் ஆடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் சிலர் சேர்ந்து பாஜக நகர இளைஞரணி பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் என்பவரை சரமாரியாக தாக்கி அரிவாளால் கழுத்துப் பகுதியில் வெட்டியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்த ஜனார்த்தனை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு சீனிவாசன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சம்பவம் அறிந்த பாஜக மாநில செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட தலைவர் வாசுதேவன் ஆகியோரின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து காவல்துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க:சட்டவிரோதமாக ஏரியில் மணல் அள்ளிய லாரிகளை மடக்கிப்பிடித்த இளைஞர்கள்