திருப்பத்தூர்: ஆம்பூர் வர்த்தக மையத்தில், இன்று மற்றும் 14, 15 ஆகிய தினங்களில் பிரியாணி திருவிழா நடத்தப்பட்டு அதற்கான ஆவணங்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து, ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வா முயற்சி செய்து வந்தார்.
இந்நிலையில் ஆ மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து பிரியாணி திருவிழா நடைபெறும் ஆம்பூர் வர்த்தக மையத்தில் 30 கடைகள் அமைக்கப்பட்டு 50 வகையான கோழி கறி பிரியாணி, ஆட்டுக்கறி பிரியாணி ஆகிய இரண்டு வகை பிரியாணிகள் தயார் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி புறக்கணிப்பட்டது தொடர்பாக ஒருசில அரசியல் கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிப்பட்டால், வர்த்தக மையத்தின் வெளியே மாட்டிறைச்சி பிரியாணி விரும்புவோருக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போரட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வா அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக பிரியாணி திருவிழாவை ஒத்திவைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆம்பூர் பிரியாணி விழா சர்ச்சை - திருப்பத்தூர் ஆட்சியருக்கு பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஆணையம் நோட்டீஸ்