திருப்பத்தூர்: ஆம்பூர் பங்காரு சாமி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். அதே தெருவில் வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் மற்றும் ராஜேஷ் என்ற சகோதரர்கள் குளிர்பான கிடங்கு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ரமேஷின் வீட்டிற்கு உறவினர்கள் காரில் வந்த நிலையில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குளிர்பான கிடங்கிற்குச் சொந்தமான ஆட்டோ இடையூறாக இருப்பதாகவும் அதை எடுக்குமாறு ரமேஷ் கூறியுள்ளார்.
இதனால் ரமேஷ் மற்றும் மகேஷிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ரமேஷ் மட்டைப்பந்து மட்டையால் மகேஷை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் கத்தியால் ரமேஷை குத்தியுள்ளார். மேலும், இதனைத் தடுக்க சென்ற ரமேஷின் மனைவியிற்கும் தலையில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் காயமடைந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களைச் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் ரமேஷை மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:நெல்லை அருகே பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து