திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பேன்சி ஸ்டோர் என்னும் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் காலணிகள் மற்றும் பேன்சி பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கானது முதல் தளத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், வழக்கம்போல் நேற்று (ஆகஸ்ட் 10) இரவு கடையின் உரிமையாளர் கடையை மூடிவிட்டுச் சென்று உள்ளார்.
இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் பேன்சி ஸ்டோர் கட்டடத்தின் மேல்தளத்தில் காலணிகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சேமித்து வைத்துள்ள கிடங்கில் இருந்து திடீரென அதிக புகை மூட்டம் ஏற்பட்டு மேல்தளம் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கி உள்ளது.
இதனைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து உடனடியாக காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தீயணைப்பு வாகனம் திடீரென பழுதானதால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வந்தனர்.
இதையும் படிங்க:தேனியில் தமிழக அரசை கண்டித்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!
பின்னர், வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், விரைவாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கத் தொடங்கி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். பின்னர், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆம்பூர் நகர காவல் துறையினர், இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், அடுக்குமாடி கட்டடத்தில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர். மேலும், மேல்தளத்தில் உள்ள கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலணி, பேன்சி வகைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகி இருப்பதும் காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:மக்களைத் தேடி மேயர் திட்டம்: ஒரே நாளில் 235 கோரிக்கை மனுக்கள்!