திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேஷ். இவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மாட்டுத் தீவன பயிரிட்டு உள்ள நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் வயலில் நீர் பாய்ச்சுவதாக நிலத்திற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் ராஜேஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் ராஜேஷின் மனைவி மற்றும் உறவினர்கள் நிலத்தில் சென்று ராஜேசை தேடிப் பார்த்தபோது அவர் அணிந்து இருந்த காலணி (செருப்பு) மற்றும் துணிகள் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே இருந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராஜேஷ் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என எண்ணி உடனடியாக ஆம்பூர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர்.
10 மணி நேரமாகப் போராடிய தீயணைப்புத் துறையினர்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர முயற்சி மேற்கொண்டு மின் மோட்டார்கள் மூலம் கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றி சேற்றில் சிக்கியிருந்த ராஜேஷ்-இன் உடலை மீட்டனர்.
சடலத்தைக் கைப்பற்றிய ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் ராஜேஷ்-இன் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர் அருகே வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:தமிழனாக இருந்தும் தமிழ்த்தாயை மதிக்க மறுப்பவர்களை என்ன செய்வது ? - ராமதாஸ் வேதனை