கரோனா சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ஆம்பூரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவும் விதமாக சீருடை, மளிகைப் பொருள்கள் வழங்கும் விழா, ஆம்பூர் தனியார் காலணி தொழிற்சாலை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்டு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை, மளிகைப் பொருள்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய அவர், ”கரோனா பெருந்தொற்றின்போது கால நேரம் பார்க்காமல் உழைத்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். அவர்களுக்கு உதவும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்பூரில் போக்குவரத்து நெரிசல், அடிக்கடி நேரும் விபத்துக்களைத் தவிர்க்க ஆம்பூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் செயல்படுத்தப்படும்” என்றார்.
ஆம்பூர் மக்களின் நெடுநாள் கோரிக்கையான ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், விரைவில் அதற்காக அரசாணையை மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெறுவதாகவும் உறுதிபடக் கூறினார். இந்த விழாவில் ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:10 நாள்கள் இடைவெளியில் காவலர் பயிற்சி வளாகத்துக்குள் இரண்டு நகைப் பறிப்பு சம்பவங்கள் : பீதியில் மக்கள்!