திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் கிராமத்தில் குமார் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 7ஆம் தேதி நடந்த திருட்டில், ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணம், சிசிடிவி கேமிரா ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
இது தொடர்பாக ஏலகிரி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு வேலூர் மாவட்டம் விருப்பாச்சிப்புரத்தைச் சேர்ந்த சம்பத் (43) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதன் பேரில், சம்பத்தை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தனது வீட்டில் கள்ள நோட்டு அச்சிடுவது தெரியவந்தது.
கைதான சம்பத்தை வேலூர் அழைத்து வந்து துத்திப்பட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், அங்கு கள்ளநோட்டை அச்சடிக்கும் இயந்திரம், 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 200 ரூபாய் கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளைப் பறிமுதல் செய்த ஏலகிரி காவல் துறையினர், பாகாயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.
அதன் பேரில், பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஏலகிரி காவல் துறையினர் சம்பத்தை ஏலகிரிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில், வாடிக்கையாளர் ஒருவருக்கு 200 ரூபாய் கள்ளநோட்டை அங்கிருந்த ஊழியர்கள் வழங்கியதாகப் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர் நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்படமாட்டாது - காவல் துறை