திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மூவேந்திரன். இவரது மகன் முகேஷ் (18). டிப்ளமோ பட்டதாரி. இவரது உறவினர் பார்த்தசாரதி என்பவரின் மகன் அபி (18). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அபி, கண் அறுவைச் சிகிச்சை செய்த தனது உறவினரின் பார்ட்டியைப் பார்க்க முகேஷ் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர், முகேஷ், அபி இருவரும் பைக்கில் பால்னாங்குப்பம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு பால் ஊற்றும் பணியை முடித்து விட்டு, இரவு 8 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகே செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணுப்பையன் என்பவரின் மகன்கள் தயாள் (36), குமார் (40), வடிவேல் என்பவரின் மகன் ராகுல் (21) ஆகிய மூவரும் மது போதையில் சாலையோரத்தில் நின்றிருந்தனர்.
அப்போது அங்கு பைக்கில் வந்த அபி, முகேஷை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து அபி, மகேஷ் வீடு திரும்பிய பின்னரும், அவர்களை பின் தொடர்ந்து தயாள் உட்பட 3 பேரும் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தயாள் என்பவர் கத்தியால் அபியைச் சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர், அபியின் நண்பரான மகேஷையும் கத்தியால் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அபி உயிரிழந்தார். இது குறித்து முகேஷின் தாயார் கலைச்செல்வி, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், திருப்பத்தூர் துணை காவல் ஆணையர் தங்கவேலு தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தனிப்படையினர் தலைமறைவாகியிருந்த தயாள், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் தலைமறைவாகி இருந்த தயாள் நண்பர்களான குமார் (40), ராகுல் ( 21) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர், மூவரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் என்ன மாடு பிடி வீரரா? - துரைமுருகனால் அவையில் கல கல