ஆலங்காயத்தை அடுத்த படகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பூஞ்சோலை. இவர் தனக்குச் சொந்தமான 40 ஆடுகளை தினமும் ஆலங்காயம் காப்புக்காட்டு வனப்பகுதியில் தினமும் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று (ஜூன் 20) காலை வழக்கம்போல் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்று, பின் பூஞ்சோலை வீடு திரும்பியுள்ளார். அவர் வீடு திரும்பிய சில மணி நேரத்திலேயே காட்டுப்பகுதியில் ஆடுகள் ஆங்காங்கே இறந்து கிடப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உடனடியாக பூஞ்சோலை காட்டுப்பகுதியில் சென்று பார்த்தபோது மேய்ச்சலுக்குச் சென்ற 40 ஆடுகளில் 20 ஆடுகள் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் ஆங்காங்கே இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து ஆலங்காயம் வனத் துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத் துறையினரும் காவல் துறையினரும் இறந்து கிடந்த ஆடுகளை மீட்டு, உடற்கூறாய்வு செய்ய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், யாரேனும் முன்விரோதம் காரணத்தால் ஆடுகள் தண்ணீர் அருந்தும் தொட்டியில் விஷம் கலந்தார்களா, வனவிலங்குகளை வேட்டையாடும் சமூக விரோதிகள் செய்த வேலையா, போன்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கடந்த ஆண்டும் இதேபோல் ஆலங்காயம் காப்பாக்காட்டுப் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த நீரைக் குடித்த 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.