திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் நிதியிலிருந்து 10 கிலோ அரிசி வழங்குவதாகப் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி அறிவித்து வழங்கிவருகிறார்.
அதன்படி இன்று அவர், கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அரிசி வழங்கினார்.
அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா வைரஸ் (தீநுண்மி) ஊரடங்கு காரணமாகப் பத்திரப்பதிவுத் துறையில் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து முக்கியமான காரணங்களுக்காகப் பத்திரப்பதிவுத் துறை செயல்பட முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் சென்று பத்திரப்பதிவு செய்யும் சூழல் நிலவிவருகிறது. அது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டால்தான் அரசு வருவாய் ஈட்ட முடியும்.
ஏற்கனவே பத்திரப்பதிவுத் துறையில் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அவர், மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையைப் போக்குவதற்காக மேட்டூர் குடிநீர் திட்டத்தை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அம்மா உணவகத்தில் அமைச்சர் கே. சி.வீரமணி ஆய்வு