திருப்பத்தூர் மாவட்டம் பெரியவரிகம் பகுதியில் வசித்து வருபவர் அமீதா பீவி (130). கடந்த 31ஆம் தேதி பேர்ணாபட்டில் முதியோருக்கான உதவித்தொகை பெற்று வந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, கடந்த 1ஆம் தேதி சுகாதாரத்துறை அலுவலர்களால், ஆம்பூர் அரசு மருத்துமனையில், கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
15 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த மூதாட்டி அமீதா பீவி, 103 வயதில் கரோனாவை வென்று வீடு திரும்பினார். கரோனாவுக்கு குட்பை சொல்லி வீடு திரும்பிய மகிழ்ச்சியில் இருந்தாலும், அமீதா பீவியின் சொந்த வாழ்வில் சோகம்தான் அதிகம் குடிகொண்டுள்ளது. வணக்கார அப்துல்லாவின் மனைவியான அமீதா பீவிக்கு 13 குழந்தைகள். இதில் 12 குழந்தைகள் மற்றும் தனது கணவரை இழந்த நிலையில், தனது கடைசி மகள் மூபாரக் (58) என்பவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கணவரை இழந்த மூபாரக், தனது மகள் ஷமா (30) ஆகிய இருவரும் தான் அமீதா பீவிக்கு ஆதரவு. இந்நிலையில், சிகிச்சைப் பெற்று நலமுடன் வீடு திரும்பிய அமீதா பீவி மற்றும் அவரது குடும்பத்தினரை அக்கம் பக்கத்தினர் ஒதுக்குவதாக தெரிகிறது. கரோனா அச்சத்தால் அவர்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளரும் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார். ஆண் துணை இல்லாமல் வசித்து வரும் மூவருக்கும் ஆதரவு தர யாரும் முன்வராததால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
வேலைக்குச் செல்லும் இடத்திலும் தன்னை பணிக்கு வரவேண்டாம் என கூறிவிட்டதால் அமீதா பீவியின் பேத்தி ஷமா வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். கரோனா அச்சம் அமீதா பீவியை விட்டு விலகினாலும் மக்களின் மனதில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனம். மேலும், இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷமா கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ஆம்பூர் சுகாதாரப் பணியாளர்கள் கூறுகையில், "அமீதா பீவி என்ற மூதாட்டிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 103 வயது இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மூதாட்டி பூரண குணமடைந்து நலமுடன் உள்ளார். இது குறித்து அருகில் உள்ளவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்" என்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் கிருஷ்ணகிரி பயணம் - அறிவிப்பே இல்லாமல் சாலையோர கடைகள் இடிப்பு