தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மறவன்மடம் திரவியபுரம் ஆர்.சி. கிறிஸ்தவ ஆலயம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது 19ஆவது பிறந்தநாளை கடந்த ஏப்ரல் 22ஆம்தேதி நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினார். அப்போது, பிறந்தநாள் கேக்கை நீண்ட வாளால் வெட்டியுள்ளார். அதனை படம்பிடித்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் அவருடைய நண்பர்கள் பதிவேற்றம் செய்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில், உடனடியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டோரை கைதுசெய்ய உத்தரவிட்டார்.
உத்தரவின் பேரில் விசாரணையை தொடங்கிய புதுக்கோட்டை காவல் துறையினர், வாளால் கேக் வெட்டிய இளைஞரை கைதுசெய்தனர். மேலும் கேக் வெட்ட பயன்படுத்தப்பட்ட வாளையும் பறிமுதல்செய்தனர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜா (24), ஜெயகணேஷ் (21), அதிர்ஷ்டலிங்கம் (27), யுவராஜா (24) ஆகியோரை தேடிவருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடியில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீதும், சாதி, மத மோதல்களை தூண்டும் வகையிலோ அல்லது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகளை ஆடியோ, வீடியோக்களாக சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபல துணிக்கடையில் திடீர் தீ: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்