உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் எம்பவர் இந்தியா அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அவர் அரசுப் பேருந்தின் முன்புறத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. காயல்பட்டினம், தென்திருப்பேரை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளதால், அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தென்திருப்பேரையில் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில் பல பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிந்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜூன் 7ஆம் தேதி மாலத்தீவிலிருந்து தமிழ்நாடு உள்பட வெளிமாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் 700 பேருடன் இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை வந்தடைகிறது. அதேபோல ஜூன் 17ஆம் தேதி ஈரான் நாட்டிலிருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்" எனத் தெரிவித்தார்.