தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்தது, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 16 வயது மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா இன்று (ஏப். 29) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு அமைதியாக வாழ்ந்துவருகிறோம். ஆனால், தூத்துக்குடி மக்களை மீண்டும் வன்முறைக்கு இந்த அரசு தூண்டிவருகிறது.
அரசியல் கட்சியினரும் தேர்தலின்போது மக்களுக்கு வெறும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு அவர்களின் தேவை பூர்த்தியானதும் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிடுகின்றனர்.
கரோனா வீரியத்தைக் காரணம்காட்டி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்துள்ளனர். இதில், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல தூத்துக்குடி மக்கள் யாருக்குமே துளியும் விருப்பம் கிடையாது.
இதனால், அதை எதிர்த்து அறவழியில் போராட நினைக்கும்போது காவல் துறையினர் மூலமாக எங்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது.
காவல் துறையினரை எங்களுக்கு எதிராக்க முயற்சிக்கின்றனர். இந்த முயற்சிகள் கைவிடப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவப் பயன்பாட்டுக்காக ஆக்சிஜன் தயாரிக்க முடியாது என ஒருதரப்பு வாதம் கூறுகிறது.
அப்படியே தயாரித்தாலும் அதற்கு ஒன்பது மாதங்கள் ஆகும் எனக் கூறப்படும் நிலையில் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது?
மருத்துவப் பயன்பாட்டிற்காக ஆக்சிஜன் தேவை எனில் அதைத் தயாரித்துக் கொடுப்பதற்குத் தமிழ்நாட்டிலேயே வேறு சில நிறுவனங்கள் உள்ளன. அதைப் பயன்படுத்தி எடுத்துக்கொள்ளலாம்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைப் பயன்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தி செய்வதால் பிரச்சினைகள்தான் உருவாகும். எனவே மக்களின் மனங்களைப் புரிந்துகொண்டு அரசு மக்களுக்கு எது நல்லதோ அதை நல்ல முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தால் நன்று" என்றார்.
இதையும் படிங்க: கட்டுப்பாடுகளுடன் நடந்த வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு