தூத்துக்குடி: தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் மன்னார் வளைகுடா பகுதியில் பாம்பன்-கன்னியாகுமரிக்கு இடையே நிலைகொண்டுள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடக்காததால், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது.
அதிகாலை 4 மணி முதல் 6.30 மணி வரை இடைவிடாது மிதமான மழை பெய்தது, மாவட்டத்தில் வேம்பார், வைப்பார் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்தது.
தூத்துக்குடியில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது, முக்கியச் சாலைகளிலும் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் சில இடங்களில் தெருக்களில் மழைநீர் தேங்கியது காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கியச் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மக்கள் அன்றாடப் பணிகளுக்காக வெளியே செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து மேகமூட்டமாக மழை பெய்யும் சூழ்நிலையே நிலவிவருகிறது. மழை இரண்டு நாள்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்களின் அன்றாடப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புரெவி புயல் வலுவிழந்த காரணத்தினால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்