தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்குள் பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் சி. நம்பிராஜா தலைமையில் திருக்கோயில், திருமடங்கள் மாவட்ட அமைப்பாளர் ஏ.பி. மாரிமுத்து, சீனிவாசன், ரமேஷ், சுதாகரன், லட்சுமணக்குமார் உள்ளிட்ட விஷ்வ இந்து அமைப்பினர் அலுவலக வளாகத்தில் அமர்ந்தனர். அவர்கள் செண்பகவல்லி அம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களைக் கண்டித்தும், அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் விஜயாவிடம் மனு ஒன்றை வழங்கினர். அந்த மனுவில், “2018 பிப்ரவரி 28இல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு உள்பட்ட வாடகை பாக்கி உள்ள இடங்களை மறு ஏலம்விட வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இது குறித்து கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்குப் பலமுறை கோரிக்கைவைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி செப்.2ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த கிழக்கு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டபோது, மறுக்கப்பட்டது.
எனவே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்து பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்திய செண்பகவல்லி அம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும். கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.