தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாள்களாக பெய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமென குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஊரக பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்டவை நிரம்பி மறுகால் பாய்கிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் வாலசமுத்திரம் பகுதியில் எப்போதும்வென்றான் அணைக்கட்டிலிருந்து வெளியேறும் நீர் கடந்து செல்வதற்கு தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. வாலசமுத்திரம் மற்றும் வெங்கடாசலபுரம் ஆகிய இரண்டு ஊர்களை இணைக்கும் இந்த பாலத்தில் பருவ மழை காலங்களில் வெள்ளநீர் இடுப்புக்கு மேல் பாய்ந்து செல்கிறது.
இதனால் இரண்டு ஊர்களுக்கும் இடையேயான போக்குவரத்து தடைபடும் நிலை உள்ளது. தற்போது பருவமழை தீவிரத்தால் எப்போதும்வென்றான் அணையிலிருந்து வெளியேறும் மழைவெள்ளம், இந்தத் தரைமட்ட பாலத்தின் வழியே பாய்ந்து செல்கிறது. இதனால் இரு ஊர்களுக்கும் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குள்பட்ட வாலசமுத்திரம்-வெங்கடாசலபுரம் ஆகிய இரு ஊர்களையும் இணைக்கும் வகையில் இந்த தரைப்பாலம் உள்ளது. இந்தத் தரைப்பாலத்தில் பருவ மழை காலங்களில் மழைவெள்ளம் அளவுக்கதிகமாக செல்வதால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க உயர்மட்ட பாலம் அமைத்துத் தரவேண்டும். கால்வாய் கரையை பலப்படுத்த தடுப்புச்சுவர் கட்டித் தரவேண்டும் எனவும் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
ஆனால் அதிகாரிகள் அவற்றைச் சிறிதும் கண்டுகொள்ளவில்லை. தற்போது கால்மூட்டு அளவுக்கு செல்லும் வெள்ளநீரால் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பொதுமக்கள் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வயதானவர்கள், சிறு குழந்தைகள் மருத்துவ உதவிக்காக கூட வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து ஓட்டப்பிடாரம் தாசில்தாருக்கு தெரியப்படுத்தினோம்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள், மழைவெள்ளம் செல்வதை ஆய்வு செய்தனர். ஆனால் அதனை தடுப்பதற்கோ, மாற்று ஏற்பாடு செய்வதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக அவர்களிடம் கேட்கையில் எங்களுக்கு முறையான பதில்கூட தரவில்லை. கால்வாய் கரையை பலப்படுத்த தடுப்புச்சுவர் கட்டித் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தும் பலன் இல்லாததால் இன்று (நவ. 19) வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது.
இந்த இடத்தில் உயர்மட்ட பாலமும், தடுப்புச் சுவரும் கட்டி இருந்தால் இன்று (நவ. 19) இந்தப் பிரச்சினையை மக்கள் சந்திக்க நேரிட்டிருக்காது. இப்போதுள்ள இந்த நிலையை சீரமைத்துத் தருவதற்கும் அலுவலர்கள் எங்களால் முடியாது என கைவிரித்து விட்டனர். தேவையில்லாத திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே வேண்டாத பணிகளைச் செய்கின்றனர்.
இதனைக் கண்டித்து 61 ஊராட்சி மன்றத் தலைவர்கள் சார்பில் பொதுமக்களை திரட்டி நாளை (நவ. 20) தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்தனர்.