தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் சின்ன வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் பால்சாமி என்பவரது மகன் அலெக்சாண்டர் (37). இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூரில் உள்ள ஆதி திராவிடர் அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த விஜயன் என்பவரது மகன் அன்பு (31) மற்றும் அவரது நண்பரான வினோத் ஆகிய இருவரிடமும் அலெக்சாண்டர் அறிமுகம் ஆகி உள்ளார்.
இதனையடுத்து இருவருக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிய அலெக்சாண்டர், இது தொடர்பாக இருவரிடம் இருந்து மொத்தம் 11 லட்சத்து 28 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால், எந்த வித செயல்பாடும் அலெக்சாண்டர் தரப்பில் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த அன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமின் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் நிவேதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முக சுந்தரம் மற்றும் மோகன் ஜோதி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்ட அலெக்சாண்டரை விளாத்திகுளம் புதூரில் வைத்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை பேரூரணி சிறையில் அடைத்தனர். அதேநேரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் அலெக்சாண்டரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1 கோடியே 26 லட்சத்து 68 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: மருமகள் முகம், பிறப்பிறுப்பில் ஆசிட் வீசிய மாமியார்.. கடலூர் பகீர் சம்பவம்!