நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகைதந்தார். தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழாவில் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அரசு எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் அதனை வரவேற்று முழு ஒத்துழைப்பு அளிக்கும் நிலைப்பாட்டில்தான் இன்று தமிழ்நாடு அரசு இருக்கிறது என்றார்.
மத்திய அரசின் இருக்கமான பிடியில் இந்த அரசு சிக்கியிருப்பதையே இது உணர்த்துவதாகவும் கூறினார். ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை திட்டம் மாநில அரசுகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்றும் வட மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த மக்களின் சதவிகிதத்தை முதலில் கணக்கெடுப்பு செய்து அதன் அடிப்படையில் உணவுப் பொருட்களை மத்திய அரசு வழங்கினால் மட்டுமே இந்த திட்டத்தை நிறைவேற்ற இயலும் எனவும் கூறினார்.
மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும் கைது செய்யப்படுவார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், மோடி அரசு பலரையும் பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டுவருவதாகவும், அவரது கைது நடவடிக்கை உள்ளிட்ட பலவும் மோடி அரசின் அநாகரிகத்தையே காட்டுவதாகவும் கூறினார். அதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் ஹெச். ராஜா போன்றோர் கருத்து தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்தக் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு அமைச்சர்கள் வெளிநாடு பயணம் குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், அரசு முடியப் போகின்ற தருணத்தில் அமைச்சர்களின் வெளிநாடு சுற்றுப்பயணம் அரசு செலவில் நடக்கிறது என்றும் அவர்கள் சுற்றுப் பயணம் செல்வது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இருந்தால் அது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார்.