தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வைப்பாறு ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர், கோட்டை பாண்டி (55). அதே பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இருவரும் அந்த பகுதியில் உள்ள முருங்கைத் தோட்டத்தில் முருங்கைக் காய் பறித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. உடனே, இருவரும் அருகேயிருந்த வேப்ப மரத்தின் கீழே மழைக்கு ஒதுங்கி நின்றுள்ளனர். இந்நிலையில் திடீரென மின்னல் தாக்கியதால், அதிர்ச்சியடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து விழுந்தனர்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களது உடல் உடற்கூராய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து விளாத்திகுளம் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : அசாமில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழப்பு!