அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில், தேர்தல் நடக்க இருக்கும் தொகுதிகளில் ஒரு தொகுதியான ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் இன்று காலை ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முரளி ரம்பா, “ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். எனவே இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத அரசியல் கட்சியினர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துவருகின்ரனர். இதன் பொருட்டு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதிலும் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் 9 காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் தலைமையில் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுதவிர மாவட்டம் முழுவதிலும் ஒவ்வொரு நிலை வாரியாகவும் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மூன்று கம்பெனி போலீசார் இன்று வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மத்திய ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 257 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில் 71 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள். தேர்தல் பரப்புரை வருகிற 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைய இருப்பதால் இவர்கள் தேர்தல் பரப்புரை மற்றும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பரிசுப் பொருட்கள் கொடுப்பது ஆகியவற்றை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேகப்படக்கூடிய நபர்கள் குறித்த விவரங்கள் துணை ஆட்சியர் தலைமையிலான குழுவினரிடம் கொடுக்க அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.