தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாயினர்.
இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை எதிர்த்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய குழுவினர், போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் ஒன்றிணைந்து போராட்டத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்த இருக்கின்றனர்.
தற்போது, இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா, 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வீடு, கோயில், கல்லறையில் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மற்ற அமைப்புகளுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை. மீறி ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கப்பார்கள். மாநகர் பகுதியில் இரண்டாயிரம் காவல் துறையினர், தமிழக சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்' என்று அவர் தெரிவித்தார்.