கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து அரசு ஆணையிட்டது. இதையடுத்து மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக மட்டும் மார்க்கெட், கடைகளுக்கு வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் திரளும் காய்கறிகள் வாங்கும் தற்காலிகச் சந்தைகள், அவற்றைச் சுற்றி இருக்கக்கூடிய கடைகளின் கதவுகள், கடைகளின் முன்பாக இருக்கும் கைப்பிடி கம்பிகள் போன்றவற்றுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சந்தைக்கு வெளியேயுள்ள பகுதியில் காய்கறி வாங்க வருபவர்கள் நிறுத்தி செல்லும் இரு சக்கர வாகனங்கள், காவல் துறை வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
அத்தியாவசியத் தேவைகளை தவிர்த்து, சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து வாகனங்களில் வலம் வந்தனர். பாதுகாப்பு பணியின்போது, சாலையில் இருச்சக்கர வாகனத்தில் அச்சமின்றி முகக் கவசம் அணியாமல் வந்தவர்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு அறிவுரையை வழங்கினர். அதைத்தொடர்ந்து இலவசமாக முகக் கவசம் வழங்கி எச்சரித்தும் அனுப்பினர்.
இதையும் படிங்க... ஆதரவற்றவர்களுக்கு முடித்திருத்தம் செய்யும் காவலர்கள்