தூத்துக்குடி சுந்தரவேலுபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை பகுதியை அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடைபெறும் சுகாதாரப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
இதனிடையே அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 34 ஆயிரத்து 500 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் 627 பேர் தற்போது கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அப்பகுதியில் பொதுவாக 100 பேரிடம் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்படுகின்றன.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினாலேயே கடந்த சில நாள்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இதனால் சமூக பரவல் தடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சை கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவதற்கு மூன்று நிலைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய உள்ளோம்.
பாதிப்பு அதிகம் உள்ள நபர்களை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கு 600 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அடுத்ததாக கோவிட் சிகிச்சை நிலையங்களாக அனைத்து மருத்துவமனைகளும் மாற்றப்படுகின்றன. இங்கு லேசான நோய் அறிகுறியுடன் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளோம்.
மூன்றாவது நிலையாக 600 படுக்கைகள் வசதகயுடன் 'கோவிட் கேர் சென்டர்' ஏற்படுத்தப்படுகிறது. இதில் அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கோவிட் கேர் சென்டர்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளனர்.
தற்பொழுது கோவில்பட்டியில் நேஷனல் பொறியியல் கல்லூரி, எட்டையபுரம் கல்லூரி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்டவை கோவிட் கேர் சென்டர்களாக மாற்றப்பட்டுள்ளன. விரைவில் இங்கு 1,000 படுக்கைகள் கொண்ட வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகமான கோவிட் கேர் சென்டர்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 1,200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்கள் இரவு நேரங்களில் வெளியே சுற்றித் திரிவது கண்டறியப்பட்டால், குணமடைந்து வீடு திரும்பியதும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
மேலும் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதற்கு கூடுதலாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க... தூத்துக்குடிக்கு மீண்டும் முழு ஊரடங்கு தேவையில்லை- மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி!