தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்திருப்பேரையைச் சேர்ந்தவர் தாஸ். தூத்துக்குடி மாவட்ட பாஜக மாவட்ட வர்த்தக அணி செயலாளராக பணியாற்றி வந்தார். இதனையடுத்து இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் ஆடு மேய்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த முன்விரோதத்தை மனதில் கொண்டு தாஸை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று (நவ. 3) தென்திருப்பேரை டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த தாஸை, ஏழு பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதில், தற்போதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், “தென்திருப்பேரை பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 7 பேரில் ஆறு நபர்களை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை கைது செய்யும் பொருட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு எஸ்சி.எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி 4.15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க...ஆடு மேய்ப்பதில் தகராறு: பாஜக நிர்வாகி டீக்கடையில் வெட்டிக்கொலை!