தூத்துக்குடி ஐஓசிஎல் நிறுவனம் சார்பில் நாகப்பட்டினத்திலிருந்து தொடங்கி கடலோர மாவட்டங்கள் வழியே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இதன் இறுதிக்கட்ட பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் குலையன்கரிசல், பொட்டல்காடு, சேர்வைகாரன்மடம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் தற்போது நடைபெற்றுவருகிறது.
பொட்டல்காடு பகுதிகளில் விவசாய நிலங்களின் வழியே ஐஓசிஎல் நிறுவனத்தினர் எரிவாயு குழாய் பதிப்பதற்கு விவசாயிகள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து தூத்துக்குடி துணை ஆட்சியர் தலைமையில் ஐஓசிஎல் நிறுவன அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே சமாதான கூட்டம் நடத்தப்பட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் விவசாயிகளுக்கு தற்போது அளித்ததைவிட மூன்று மடங்கு இழப்பீடு பணம் தரவேண்டும், பொட்டல்காடு குளத்தை ஆறு அடி ஆழத்தில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை அந்நிறுவனத்தினர் ஏற்ற்க்கொண்டு, எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தொடர்ந்து வந்தனர். ஆனால் சமாதான கூட்டத்தில் பேசியபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை நிறுவனத்தினர் தரவில்லை என கூறப்படுகிறது.
மேலும் எண்ணெய் நிறுவனத்திடம் நிலம் ஒப்படைப்பதற்கு பணம் வாங்காத விவசாயிகளின் நிலத்திலும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் நிறுவனத்தினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எண்ணெய் நிறுவன அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் இடையே நிலவி வந்த அசாதாரண சூழலை தணிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை24) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐஓசிஎல் அலுவலர்களுடன் நடைபெற்றது.
இதற்கு போட்டியாக குலையன்கரிசல், பொட்டல்காடு சுற்றுவட்டார கிராம விவசாயிகள் சார்பில் ஆலோசனைக்கூட்டம் குலையன்கரிசல் கிராம விவசாயிகள் சங்கத்தின் வைத்து நடைபெற்றது. இதில் ஐஓசிஎல் நிறுவனத்தினர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தராதது மற்றும் அத்துமீறல்கள் குறித்து ஆலோசித்தனர்.
இதையும் படிங்க....சன் ஃபார்மா விரிவாக்கத்துக்கு தடை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு