தூத்துக்குடி ராஜகோபால் நகர் 7வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் ஆவுடையப்பன் (60). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பெருமாள் மகன் சுப்பையா (55).
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது இரு சக்கர வாகனத்தை, ஆவுடையப்பனின் வீட்டின் முன்பு நிறுத்தி கழுவிக் கொண்டு இருந்துள்ளார். இதனை ஆவுடையப்பன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இருகுடும்பங்களுக்கும் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆவுடையப்பன் புதிதாக கார் வாங்கி வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். இது சுப்பையாவுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சந்திரேசன் நகர் பகுதியில் ஆவுடையப்பனுக்கு சொந்தமான மாட்டுத்தொழுவத்தில் இருந்த ஆவுடையப்பன், அவரது மகன் பெருமாள், அவரது தம்பி ஆகிய மூன்று பேரை சுற்றி வளைத்து சுப்பையா அவரது தம்பி நாராயணன் உள்ளிட்ட 10 பேர் கும்பல் வெட்டியது.
இதில் ஆவுடையப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பெருமாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது தம்பி தாக்குதலின் போது அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிப்காட் காவல்துறையினர் ஆவுடையப்பனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த பெருமாளை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மருமகளின் படிப்பை தொடர உதவிய மாமியார் - கடுப்பான மகன் செய்த கொடூரம்